Saturday, May 29, 2010

கவனம் !

உன் இறால் இதழை
உடனே பத்திரப்படுத்து..
என் இளமைக்கொக்கு
கொத்திவிடத் தயாராய்
கவனம் !!!

Monday, May 24, 2010

படைப்பாளி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா !

ஊவா மாகாணம், பதுளை மாவட்டம், ஹப்புத்தளை தேர்தல் தொகுதியில் தியத்தலாவை என்ற ஊரைச் சேர்ந்த இளம் கவிதாயினியும், சிறுகதை படைப்பாளியுமான எச். எப். ரிஸ்னா, ஹலால்தீன் - நஸீஹா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியாவார்.

தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா என்ற சொந்தப் பெயரையே பெரும்பாலும் பயன்படுத்தி வரும் இவர் கவிநிலா, குறிஞ்சி நிலா என்ற புனைப் பெயர்களிலும் எழுதி வருவதுண்டு. சொந்த ஊரான தியத்தலாவையிலிருந்து இடம்பெயர்ந்து வந்து உயர்படிப்புக்காக தலைநகரில் தங்கியிருக்கிறார்.

துரம் 03ல் கல்வி கற்கும் போதே பூங்கா என்ற சிறுவர் சஞ்சிகையில் இவரது ஆக்கம் வெளிவந்தது. அத்துடன் மீலாத் தின போட்டிகள், தமிழ்தினப் போட்டிகளில் பங்குபற்றி பல தடவைகள் முதலிடத்தை பெற்றிருக்கிறார்.

தரம் 08ல் கற்கும் போதே கவிதையின் படிக்கட்டுக்களில் காலடி எடுத்து வைத்த இவரது முதல் கவிதை 2004ம் ஆண்டு மெட்ரோ நியூஸ் என்ற பத்திரிகையில் காத்திருப்பு என்ற தலைப்பில் வெளிவந்தது. அதையடுத்து இதுவரை சுமார் 120க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 20க்கும் அதிகமான சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

துன்பம், சந்தோஷம், இனிமை, காதல், பெண்ணியம், சமூக அவலம், சீதனக்கொடுமை, மலையகப் பிரச்சனைகள் என்பன இவரது பாடுபொருள்களாக காணப்படுகின்றன.

வீரகேசரி, தினகரன், தினக்குரல், மித்திரன், மெட்ரோ நியூஸ், சுடர்ஒளி, நவமணி, விடிவெள்ளி, போன்ற இலங்கையின் முன்னோடிப் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளான ஓசை, நிஷ்டை, மரங்கொத்தி, ஜீவநதி, செங்கதிர், படிகள், அல்லஜ்னா, நிறைவு, ஞானம், இந்திய சஞ்சிகையான இனிய நந்தவனம், மற்றும் இணையத்தளங்களான www.vaarppu.com, www.youthfulvikatan.com பெண்களின் குரலாக ஒலிக்கும் www.oodaru.com, போன்ற வலைப்பதிவுகளிலும் அவருடைய ஆக்கங்கள் பதிவாகியுள்ளன.www.riznapoems.blogspot.com, www.riznastory.blogspot.com, www.poetrizna.blogspot.com ஆகிய தன்வலைப்பூக்களிலும் அவரது படைப்புக்களைப் பார்வையிட முடியும்.

2008ம் ஆண்டு ஏப்ரல் 20 - 26 வார சுடர் ஒளி பத்திரிகையில் வெளிவந்த உணர்வுகள் என்ற பகுதியிலும், 2008 புரட்டாதி மாத செங்கதிர் சஞ்சிகையிலும் மற்றும் 2010ம் ஆண்டு பெப்ரவரி ஞானம் சஞ்சிகையிலும் இவரைப் பற்றிய குறிப்புகள் பிரசுரமாகியுள்ளன.

பிறை எப்.எம்., சக்தி எப்.எம்., இலங்கை வானொலி முஸ்லிம் சேவை மற்றும் நேத்ரா அலைவரிசையில் கவிதை கூறியிருப்பதுடன் கடந்த 2010 பெப்ரவரி 03ம் திகதியன்று இவரது நேர்காணலும் இடம் பெற்றது.

தற்போது BEST QUEEN FOUNDATION என்ற அமைப்பின் பிரதித் தலைவராகவும் (bestqueen12@yahoo.com, www.bestqueen12.blogspot.com) பூங்காவனம் சஞ்சிiயின் ஆசிரியர் குழுவிலும் சேவையாற்றி வரும் இவர் இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையிலும் அங்கத்துவம் வகிக்கின்றார்.

பேய்களின் தேசம் இன்னும் உன் குரல் கேட்கிறது என்ற இவருடைய இரு கவிதைத் தொகுப்புக்களும் கனவுகள் உயிர் பெறும் நேரம் என்ற சிறுகதைத் தொகுதியும் இலக்கிய உலகத்துக்குள் நுழைய காத்திருக்கிறது.

இலக்கியத் துறையில் மாத்திரமன்றி கணினித் துறையிலும் அதிக ஆர்வம் காட்டி வரும் இவர் Information & Communication Technology என்ற கற்கை நெறியைப் பூர்த்தி செய்து Diploma பட்டத்தையும் பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கவி வானில் உலா வரும் இக் கவிநிலாவுடன் தொடர்பு கொள்ள...

E-Mail- poetrizna@gmail.com

Friday, May 21, 2010

துவம்சத்தில் இதயம்!

அதிர்ஷ்டம் என்ற வார்த்தைக்கான
அர்த்தங்கள் எனக்குப் புரிகிறது!

அழகு,அறிவு, ஆற்றல்...எல்லாமே
அதிர்ஷ்டத்தின் முன்
கானல் நீர் தான்!

வாழ்வின் பிடிகளுக்குள்
சிக்கிக் கொண்டதால்
வழிகள் ஏதுமின்றி
இரத்தமும் ஆவியாகிப் போகிறது!

சோர்வு துக்கம் விரக்தி பிணி
எனக்குத்தான் எத்தனை உறவுகள்!

நிமிடங்கள் தோறும்
எச்சரிக்கை மணி
துவம்சிக்கிறது இதயத்தை!

கொடூரமான நினைவுகளில்
ரௌத்திரமாகி
கொதித்து சாகிறது
உயிர் பறவை!

பிழை பொறுக்க வருவாயா

மண்ணுள்ளே
புதையுண்டுப் போன
உத்தமியே!

மனசாட்சிக்கு கட்டுப்பட்டு
மனிதனாய் வாழத்தன் ஆசையிருந்தது எனக்கும்!

காலம் செய்திட்ட கலவரத்தில்
இன்று கயவன் பட்டத்துடன்
நான் - இது
இன்றைய என் நிலவரம்!

விதியின் பூட்சுக்கால்களால்
தினமும் நசுக்கப்பட்டு பழகியதால்
இன்று உள்ளம் கிடக்கிறது
குற்றுயிராய்!

சில அரக்கர்களின்
வரட்சிப் பசிக்கு - என்
இதயச்சாறல்லவா
பிழியப்பட்டது?
எல்லாம் முடிந்த பின்
கல்லாயிருந்த அது
தகர்க்கப்பட்டது!

நீ அறியாய்...
அறியாமலேயே போய் விட்டாய்!

நான்
சூழ்நிலைக் கைதியாகி விட்டேன்..
என் வாழ்வும்
இருள் மயமாகி விட்டது!

உன்னை தேடி
ஓடி வருகிறேன்...
பிழை பொறுத்து
என் உயிராய்
இருக்க வருவாயா?

பௌர்ணமியில் வழியும் சுக நரகச் சுவர்க்கம்!

அன்றைய கொடுங்கணங்கள்
இன்னும் கூட - என்
இதயக்குடிசையை முற்றுகையிட்ட படி!

யாருமில்லா
பௌர்ணமி பொய்த்துப்போன
அந்த இரவில்...
நீயம் நானும் தனித்திருந்து
கொடுத்துக் கொண்ட
இதயத்தின் அன்பளிப்புகள்!

உன் செழுமையான பகுதிகள் எனை அழுத்த...
கைகள் வளைத்து
அணைத்துக் கொண்ட
சுகநரகச்சுவர்க்கங்கள்!

குளிர்ந்த பனியின் தாக்கமும்
கொந்தளித்த
இளமையின் ஏக்கமும் இணைந்து
நம்மை நாமே மறந்து போன தருணங்கள்!

உன் கண்ணெறும்பு
என் இதயத்தைக் கடிக்க...
என் கைகள் குறும்புடன்
உன் இடை ஒடிக்க...
இப்படி எத்தனை எத்தனை?

உனக்கு வலிக்மே என்று
மென் விரலைக்கூட
பற்றிட தயங்கிய
எனை மறந்து விட்டு
வேறொருவனுடன்
இணைந்து விட
முடிந்தது பற்றித்தான்
இன்னமும்
நம்ப முடியவில்லை
என்னால்!!!

இடியாடும் வானமும், புயலாடும் பூமியும் !

ஆக்ரோஷமாக... பாறையில்
ஆவேசத்துடன் மோதியும்
தோல்விகளை சுமந்தே
திரும்புகின்றன
கடலலைகள்!

எஞ்சியிருக்கும் மீதி நாட்களும்
அப்படியே ஆகிடுமோ என்றே
இடியும் புயலும் மனாதில்
நர்த்தனம் செய்கிறது!

என் எண்ணங்கள் எதுவுமே
வண்ணம் பெற்று சிறப்பானதேயில்லை!

கற்பனைக் கடலில்
மிதக்கிறேன் - எனினும்
ஒன்றாவது விற்பனையாகி
ஈடேற்றம் காணாத
கானல் நீர் தான்!

நஞ்சுச் செடியைச் சுற்றி
வேலியிட்டு என்ன பயன்?
முட்டைக்குள்ளே - அழகிய
முத்தொன்றை எதிர்பார்த்ல்
அறிவாகுமா?

பிடிக்கவில்லை எனக்கெதுவுமே..
மலரொன்று முட்களில் வாழ்வதும்..
சிலர் சொற்களில் உயிர்கள் வீழ்வதும்

எனக்கான ஆறுதல் கரம்!

என் அறிவில் பதிந்திடாத
நாமம் கொண்ட மரமே...
உனை பெற்றதென்னவோ
நான் செய்திட்ட தவமே!

இன்று...
உன் இதய வால்வுகள்
அறுந்து தடிக்கின்றன...
கிளைகளை மட்டும் தானே
இழக்கப்போகிறாய் என்று
போலிச் சமாதானம்
ஒன்றைச் சொல்லியே
தேற்ற வேண்டியதாச்சு
எனையே நான்!

ஆனால்...
வேர்விட்டு படர்ந்திருந்த உன்னை
முழுவதுமாய் வெட்டிப் போட்ட
பின்னால் தான் உணர்ந்தேன்
உனை மிகவும் தான்
இழந்து விட்டேன் என்பதை!

மொட்டை மாடிதனிலிருந்து
என் சோகங்களையும்
சுகங்களையும் கூறுகையில்
முகம் சுளிக்காது
அகம் வலிக்காது
எதன்றலின் சிலுசிலுப்பாலும்
இலைகளின் சலசலப்பாலும்
இதயத்துள் இதமூட்டுவாயே!

நீ
தும்பிப் பூச்சியாய்
சிறகடித்து திரியும் சிறார்களின் நந்தவனம்..
சுள்ளி விறகையும் கொடுத்துதவும்
உன் தயாள குணம் அறிந்திருந்ததால்
இப்போது
சிதறுண்டு போயிற்று என் மனம்!

ஈரெண்டு ஆண்டுகளாய்
நீயின்றி நானில்லை வாசகம்
பேசி வஞ்சித்த என்னவளுக்கும்
கள்ளிச்செடி சொந்தம் கூறி
கழுத்தறுத்த கயவர்கள் மத்தியிலும்
நீ
வெறும் மரமல்ல...
என்னை தட்டிக்கொடுத்த
ஆறுதல் கரம்!

பசியாற்றும் தனிமை!

தூர இருந்தால் தானே
மழைத் தூறல்களுக்குக் கூட
மகிமை!
என்னைத் தான் பிடித்து
தன் பசியாற்றிக் கொள்கிறது
இங்கே தனிமை!

நீ;
நொடிப் பொழுதில்
என் நோய் தீர்த்துச்
சென்றவள்!
கொடி இடையாய்
அந்த மாந்தோப்பில்
நின்றவள்!

உன்னைப் பற்றி இதயத்தில்
எத்தனையோ வண்ணங்கள்!
அவற்றை விட உயிரூட்டுவது
உன் இரு கன்னங்கள்!

மனசைக் கட்டிப்போட்டு
என் உணர்வுகளை
தட்டிய பெண்மையே!
உன்னுடனான
வாழ்க்கை கேட்டு
கெட்டழிகிறேன்
இது உண்மையே!!!

கனவுகள் பொய்த்த ராத்திரிப் பொழுது !

எரிச்சலில் இதயம் எரிகிறது
என் விதி கொண்ட
அன்பைப்பற்றி
கொஞ்சம் கொஞ்சமாக
எனக்கும் புரிகிறது!

உன் முத்தங்கள்
முள்ளாய் வலிக்கிறது!
சுவாசக் காற்று கூட
என்னைச் சுட்டு எரிக்கிறது!

மூளையைக் கொத்திவிட்டுப் போகிறதே
நரமாமிசம் திண்ணும்
நாகப் பாம்பொன்று!

மொட்டை மாடியிலே
தன்னந்தனியாக
நான் உலாவரும் போது
விலா துடிக்க வைத்திற்றே
உன் விசவசனங்கள்!

கடின பிரயாசை கொண்டு
இன்பங்களை மட்டும்
வருவிக்கப்பார்க்கிறேன்!
ஆனால்..
உயிரின் இழை அறுந்தபடியே
மரணத்தின் கோரவெம்மை
கைநீட்டி அழைக்கிறதென்னை!

கனவுகள் பொய்த்துப்போகிற
ராத்திரிப் பொழுதுகளில் துளிர்க்கும்
உன் மீதான சுகானுபவங்களை
முளையிலே வெட்டியெறிந்து
எள்ளிநகையாடிவிட்டு சிரிக்கிறது
என்னைப்பார்த்து என் ஜீவிதம்!!!

மண்டை ஓடும் இரத்தக்கசிவும்!

உன் இதயத்தை
பூங்கா என்றல்லவா எண்ணியிருந்தேன்
முற்றும் முழுதாக
கள்ளிச்செடி இருப்பதுபற்றி தெரியாமல்!

என் மண்டையோட்டு
இரத்தக்கசிவுகளிலும்
உன்னால் மறக்கப்பட்ட நிகழ்வுகளிலும்
நிறைந்து வழிகின்றன
நான் கண்ட ஏமாற்றங்கள்!

என் அன்பென்ற
புண்ணிய ஸ்தலத்தை
எச்சம் செய்து போன காகம் தானே நீ!

பொய் மட்டுமே பூசப்பட்டிருந்த
காட்சி சித்திரத்தின்
முழு உரிமையும் உனக்குத்தான்!

என் மௌன இரட்சிப்புக்களால்தான்
நான் இன்னும் உயிர் வாழ்வதாய்
காதோரம் சொல்லிப் போயிற்று
பெருங்குரலெடுத்து ஆந்தை ஒன்று!!!

நீ எனக்கானவள்!

என் இதயமெனும் அட்சய
பாத்திரத்தில் உன் எண்ணங்களே
சுரந்த வண்ணம் முடிவிலியாக!

ப+ விழியே..!
ஒரு வழியில் நாம் ஒருமித்திடத் தானே
தவமிருந்ததாய் நீ சொன்ன ஞாபகம்?

இப்போதென்ன
மனசு மருகிப் போயிற்றா
மனசாட்சி கருகிப் போயிற்றா?

கண்ணுறக்கம் தொலைத்து
கனநாளாகி விட்டது!
விரும்பியுண்ணும் ஐஸ்கிறீம் கூட
வெந்நீராய் சுட்டது!

சகியே..!
உன் மன்னன் மாய்ந்திட முன்
ஒரே ஒரு தடவை
உன்பாதம் கொண்டு
என் உள்ளத்தில் ஓர் தடம் வை!
நீ எனக்கானவள் தான் என்று!!!

இதயமும் பழஞ்செருப்பும்!

வாழ்க்கை மீதான ஆவல்
கொஞ்சம் கொஞ்சமாக
வலுவிழந்து போகிறது!

யாரையும் பிடிக்கவில்லை
ஏமாந்தே மாய்ந்து போகும்
என்னையும் எனக்குப்
பிடிக்கவேயில்லை!

சேற்றில் முளைத்த செந்தாமரைக்கு
உள்ள மதிப்பு
சாலையோரப் பூக்களுக்கு இல்லை தானே?

வெறுமையாய்
இருக்கும் போது கூட
இப்படி இதயத்தில் வெம்மை
பரவியதில்லை!

அனுபவங்கள் ஆயிரம்!
என்றாலும்..
திருந்தாத என் இதயத்தை தான்
தேய்ந்த பழஞ் செருப்பால்
நாலு சாத்து சாத்த வேண்டும்!!!

பிணமும் மணக்கும் அதன் மனமும் !

ஓவியமாய் என்னில்
நீ
இருப்பதனால்;
காவியம் படைக்க
நினைத்ததும்
சரியே!

பிறரிடம்
காட்டுகிறாய்
மனித நேயத்தை!
ஏனோ
எனக்கு மட்டும் தருகிறாய்
வார்த்தைகளால்
காயத்தை!

எளிமையை விரும்புபவளாய்
நீ இருக்கிறாய்..
தனியாய் நான்
தவிப்பது கண்டு சிரிக்கிறாய்!

அருகிலிருக்கும்
என் இதயத்தை
மிதித்துக் கொண்டு
தூர இருக்கும்
மனிதர்களை நீ
மதிப்பது பற்றி
பெருமைப்படுகிறாய்!

அரக்கனாய்
நான் இருந்த போதும்..
உன் மீது கொண்ட இரக்கம்
குறையாது ஒரு போதும்!

உன்
கண்ணீர்..
அது வெந்நீராய்
எனை சுட்டது பற்றி
உனக்குக் கூட
தெரியாது தான்!

இரட்டை வேஷம்
போட்டது
உனை படுகுழியில்
தள்ளிடவல்ல!
வேஷத்தில்
மறைந்துள்ள
உன் மீதான பாசத்தை
நீ
புரிந்திடு மெல்ல!!!

தரை நிலவு!

பேரூந்தில் நீ ஏறுகையில்
ஏக்கமாய் பார்த்தாயே?
அது தந்த தாக்கம்
முழு நாளுமே தொடர்ந்தது!

என் இதயத்தில்
சுகமாய் துயில் கொள்பவளே!
இன்று மட்டும் எனை பார்க்க
தோன்றியதும் ஏனோ?

ஒவ்வொரு நாளும்
நீ
ஏறி மறையும் வரை
நான் காத்திருப்பதை
காதோரம் வந்து
ரகசியம் சொல்லிற்றா
காற்று?

சில சமயங்களில் மட்டும்
என் உணர்வுகளை
மிதித்து நீ நடப்பதன்
தாற்பரியம் தான் என்னவோ?

விலை மதிக்க முடியாத
உன் பாசமதை
வேண்டி நிற்கும் காரணத்துக்காக
கொலைப்பட்டாலும்
உனை நான் பிரிய மாட்டேன்!

உன் நேசத்தை முழுசாய் தந்திட
நீ மறுத்துப் போனாலும்
அன்பினைத் தேடி வேறெங்கும்
திரிய மாட்டேன்!

உன்னுடைய
காதல் கேட்டு
தினமும்
உயிர் தேய்கிற நானும்
தரை மீது வந்துதித்த
உனக்கான ஒரு நிலவு தான்!!!

ஒருத்தியின் இதயத் தீ !

தனிமை தான்
இனிமை என்றிருந்தேன்!
இது எவ்வளவு கொடுமை
என்று இன்றுணர்ந்தேன்!

வாழ்க்கை மீதான நம்பிக்கையில்
நம்பி கை வைத்தவை யாவும்
எனக்கெதிராக சதி
செய்தவாறு!

உலகத்தின் சௌந்தர்யங்களை
கண்கள் தரிசிக்கு முன்பே
ஒதுங்கிட்டாள் பெற்றவள்!
குடித்துக் குடித்தே
விழி பிதுங்கி
நாசமாய் போனார் மற்றவர்!

மணல் வீடு கட்டி
நண்டு பிடிக்க நினைத்த
போதெல்லாம்
கை கட்டி வாய் பொத்தி
உரிமையிழந்த
வேலைக்காரியாய் இருந்திருக்கிறேன்!

புத்தகம் சுமந்து
ஓடியாட எண்ணிய போதும்
முதலாளியின் சின்னவனுடன்
மல்லுக்கட்டவே
நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறேன்!

அன்பென்ற புறா
எனை தீண்டிச் செல்வதற்காக
என்னையே குப்பையாய்
மாற்றி இருந்திருக்கிறேன்!

காற்றெனக்கு
தொட்டில் கட்டி
இயற்கையிடம் பாலருந்தி
நான் உருவாகிட்ட கதை முன்னே
நஞ்செல்லாம் பஞ்சாகத்தான்!!!